திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்கேப்பேட்டை அருகே அம்மநேர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் மகன் மோகித், இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு முடிந்த பின் உணவு இடைவேளையின் போது, பள்ளியின் நடைமேடை பகுதியில் இருந்த பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அந்த நேரத்தில் சுவருக்கு அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவன் மோகித் மீது சுவர் விழுந்ததில், பலத்த காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணீருடன் வேதனை வெளிப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








