வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனம் அடைந்து, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என்ற அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.
இன்று கனமழை பெய்யும் என முன்பாக ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது பலவீனம் அடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அது இன்று காலை 5.30 மணியளவில் வடக்கு உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கர்நாடகா பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இது மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் இன்னும் பலவீனம் அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக, இது புயலாக வலுப்பெறும் அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து, சாதாரண காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று காலை 5.30 மணியளவில் மாறியுள்ளது.








