அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற முழக்கத்தின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் கனடாவிலிருந்து வரும் உரங்கள் மீது புதிய வரிகளை விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மலிவான வெளிநாட்டு இறக்குமதிகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க விவசாயிகளுக்கான நிதி உதவி தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய அதிபர், இந்தியாவிலிருந்து மானிய விலையில் இறக்குமதியாகும் அரிசி மற்றும் கனடாவிலிருந்து வரும் உரங்கள் உள்நாட்டு சந்தை விலையை கடுமையாக பாதிப்பதாகவும், இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஏமாற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவாலாக இருப்பதை கவனத்தில் கொள்ளப்படும் என்றும், தேவைப்பட்டால் வரிகளை தொடரலாம் அல்லது விதிக்கலாம் என்றும் அவர் சூசகமாக தெரிவித்தார்.
லூசியானாவை தளமாக கொண்ட கென்னடி ரைஸ் மில்லிங் தலைமை நிர்வாக அதிகாரி மெரில் கென்னடி போன்ற தொழில்துறை தலைவர்களும் இந்த வரிவிதிப்பை இரட்டி பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த வரிவிதிப்பு முடிவானது.
ஏற்கனவே, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, துணி மற்றும் கடல் உணவு பொருட்கள் உள்ளிட்ட இந்திய பொருட்களின் மீது விதித்த 50% உச்ச வரிகளின் தொடர்ச்சியாக இது வருகிறது.
இரு நாடுகளின் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத நிலையில், இந்த முடிவுகள் இருதரப்பு உறவில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் இந்தியாவுக்கு அரசு பயணம் மேற்கொண்டதும், கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்று கிரம்லின் கருத்து தெரிவித்ததும், இந்த தொடர்ச்சியான வரிவிதிப்புகளின் பின்னணியில் அரசியல் எதிரொலி இருக்கலாம் என்றும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








