தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான அனைத்தையும் முன்வைத்து ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மேற்பார்வை பொரியாளர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டு இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கையான மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திறக்கு பிறகு தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
மேலும் அரசாணை 950 ஐ தற்போது உள்ள திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
. மேலும் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் நீண்ட காலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அரசாங்கத்தின் தரப்பில் எந்தவித தீர்வும் எட்டவில்லை எனவும் இந்த போராட்டத்தில் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து செல்கின்றார்கள்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








