Home இந்தியா “போனில் ‘ஹலோ’ சொன்னாலே ஆபத்து! உங்கள் குரலே உங்களுக்கு எதிரியாகும் காலம்…”

“போனில் ‘ஹலோ’ சொன்னாலே ஆபத்து! உங்கள் குரலே உங்களுக்கு எதிரியாகும் காலம்…”

உங்கள் குரலே உங்களுக்கு எமனாக மாறும் காலம் வந்துவிட்டது. ஆம் — நீங்கள் போனில் பேசும் ‘ஹலோ’ என்ற ஒரு வார்த்தையை வைத்தே உங்கள் வங்கி கணக்கை காலி செய்யும் ஒரு அதிபயங்கர மோசடி கும்பல் களத்தில் இறங்கி இருக்கிறது. சைபர் கிரைம் நிபுணர்கள் வெளியிட்ட இந்த பகீர் எச்சரிக்கை ஒட்டுமெத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஓர் சம்பவத்தை கேட்டால் உங்கள் இரத்தம் உறைந்து போகும். 72 வயதான ஒரு பாட்டிக்கு, அமெரிக்காவில் உள்ள அவர் நாத்தனாரின் பெயரில் இருந்து ஒரு புதிய நம்பரில் வாட்ஸாப்பில் பணம் கேட்டு ஒரு செய்தி வந்துள்ளது.

நம்பர் புதிதாக இருந்ததால் பாட்டிக்கு சற்று சந்தேகம். “சரி, உண்மையா என்று பார்த்து விடலாம்” என்று அந்த நம்பருக்கு போன் செய்தார்.எதிர் முனையில் பேசியது அப்படியே அவரது நாத்தனாரின் குரல்.

அந்த குரலை கேட்டதும் சந்தேகம் அனைத்தும் பறந்து போய், பாட்டி நம்பி ₹1,97,000 அனுப்பிவிட்டார். பணம் அனுப்பிய அடுத்த நொடி அந்த நம்பர் பாட்டியை பிளாக் செய்துவிட்டது.

பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. பதறிப்போய் அமெரிக்காவில் உள்ள இன்னொரு உறவினருக்கு போன் செய்து கேட்டபோதுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது — அவர் பேசினார் நாத்தனாருடன் அல்ல, ஒரு ஏமாற்றுக் கூட்டத்துடன்.

ஆனால் குரல் மட்டும் எப்படி அச்சு அசலாக இருந்தது? இங்குதான் நுழைகிறது அந்த வில்லன் — ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம்.

இந்த மோசடி எப்படி நடக்கிறது என்று சைபர் கிரைம் போலீசார் விளக்கும்போது தான் அதன் முழு பயங்கரம் வெளிவருகிறது. முதலில், உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்து ஒரு போன் வரும்.

நீங்கள் எடுத்தவுடன் ‘ஹலோ’ சொன்னால் போதும். எதிர்முனையில் இருப்பவர் உடனே போனை துண்டித்துவிடுவார். ஆனால் அந்த ஒரு நொடியில் உங்கள் குரல் ரெக்கார்ட் செய்யப்படும்.

அந்த ஒற்றை ‘ஹலோ’வை வைத்து ஏஐ தொழில்நுட்பம் உங்கள் குரலை அப்படியே க்ளோன் செய்து விடுகிறது. பிறகு உங்கள் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ, உங்கள் குரலிலேயே பேசிக் கொண்டு “அவசரமாக பணம் வேண்டும்” என்று கேட்டுத் தயார் பணத்தை ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

நிஜ குரலும் ஏஐ குரலும் எது என பிரித்தறிவது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் இந்த மோசடிக்கு ஆளானவர்களில் 83% பேர் பணத்தை இழந்திருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் ₹50,000க்கு மேல் இழந்துள்ளனர் என்பதும் இந்த மோசடியின் தீவிரத்தை காட்டுகிறது. அதனால், இனிமேல் தெரியாத நம்பரில் இருந்து போன் வந்தால், எடுத்தவுடன் ‘ஹலோ’ சொல்ல வேண்டாம்.

முதலில் எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பதை கேட்டறிந்து, அவர்களை உறுதி செய்த பிறகு பேச துவங்குங்கள். யாராவது மெசேஜ் மூலம் பணம் கேட்டால், உடனடியாக அவர்களுக்கு வீடியோ கால் செய்து ஆளை நேரில் பார்த்து உறுதி செய்த பிறகே பணம் அனுப்புங்கள்.

இத்தகைய பாதுகாப்பை மீறியும் நீங்கள் ஏமாற்றப்பட்டால், ஒரு நொடியும் தாமதிக்காமல் தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 ஐ உடனடியாக அழைக்கவும்.